மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம்; கோவையில் 220 பயனாளிகள் தேர்வு
கோவை; கோவை மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டுக்கு 220 மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர பெட்ரோல் வாகனம் வழங்கப்படவுள்ளது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், கல்வி, மருத்துவம், பராமரிப்பு உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உடல் இயக்க குறைபாடு, 60 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு, மூன்று சக்கர வாகனம் வழங்கப்படுகிறது.அதன்படி, கோவையில் கலெக்டர் தலைமையில் மருத்துவர்கள், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கமிட்டி பயனாளிகளிடம், விண்ணப்பங்களை பெற்று தகுதியான நபர்களை தேர்வு செய்துள்ளனர். இந்நபர்களுக்கான வாகனங்கள் தயார்நிலையில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.மாற்றுத்திறனாளிகள் துறை திட்ட அலுவலர் சுந்தரேசன் கூறுகையில், '' 60 சதவீதத்திற்கு மேல் உடல் இயக்க குறைபாடு உள்ள நபர்கள், கை சரியான இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். கல்லுாரி செல்பவர்கள், பணிக்கு செல்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.220 பேருக்கு வழங்க, வாகனங்கள் தயாராக உள்ளன. நிரந்தர பதிவு எண், ஓராண்டுக்கான இன்சூரன்ஸ், ஹெல்மெட் என ஒரு நபருக்கு, ரூ.1.10 லட்சம் மதிப்பில் இவ்வாகனம் வழங்கப்படவுள்ளது,'' என்றார்.