வேகத்தடை இல்லாததால் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடசித்தூர் ரோட்டில் கொண்டம்பட்டி அருகே வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, வடசித்தூர் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளன. இதில், கொண்டம்பட்டி தனியார் கல்லூரி அருகே, இரண்டு அபாயகரமான வளைவுகள் உள்ளன.இந்த ரோட்டின் வளைவில், நேற்று கிணத்துக்கடவிலிருந்து வடசித்தூர் சென்ற ஆமினி வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆம்னியை ஓட்டிய நபர் சிறு காயங்களுடன் தப்பினார். மின் கம்பம் உடைந்தது சாய்ந்தது.மக்கள் கூறியதாவது: இந்த வழியில் அதிகளவு மக்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். வளைவுப் பகுதி மிகவும் அபாயகரமாக உள்ளது. இதன் அருகில் கல்லூரி இருப்பதால், மாணவர்கள் அதிகளவு செல்கின்றனர். மேலும், விபத்து ஏற்படுவதை தவிர்க்க இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வேகத்தடை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டோம்.ஆனால், தற்போது வரை வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்கவில்லை. விபத்தை தவிர்க்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.