உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை: கால்நடை துறையினர் நடவடிக்கை

மாநில எல்லையில் தீவிர வாகன சோதனை: கால்நடை துறையினர் நடவடிக்கை

பொள்ளாச்சி: ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக, கோவை- - கேரள சோதனை சாவடிகள் அலெர்ட் செய்யப்பட்டு, அங்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரள மாநிலம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பன்றிப் பண்ணைகளில் வைரஸ் பாதிப்பால், பன்றிகள் இறப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி அருகே தமிழக எல்லையான நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், ஜமீன்காளியாபுரம், செமணாம்பதி, வடக்குக்காடு, வீரப்பகவுண்டன்புதுார் ஆகிய ஏழு இடங்களில், கால்நடைத்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துவதுடன், கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்படுகிறது. பன்றிகள், தீவனங்கள், பண்ணை சார்ந்த பொருட்கள், உணவு கழிவுகள் எடுத்து வரும் வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதுதவிர, தொண்டாமுத்துர், கொல்லம்பட்டி, ஆனைமலை காளியாபுரம் பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில், கால்நடை உதவி இயக்குனர் சக்ளாபாபு தலைமையிலான கால்நடை டாக்டர்களை உள்ளடக்கிய குழுவினர், ஆய்வு நடத்தி உரிய ஆலோசனை அளித்து வருகின்றனர். கால்நடைத்துறையினர் கூறியதாவது: கேரளாவில் இருந்து பன்றிகள், உணவு கழிவுகள், பண்ணை தீவனங்கள் உள்ளிட்டவை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதர வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் மூன்று இடங்களில் பன்றி பண்ணைகள் உள்ளன. இங்கு, அனைத்து பன்றிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. பண்ணைகளில் உள்ள பன்றிகள், திடீரென தீவனம் உட்கொள்ளாமல், காய்ச்சல், சோர்வு, தோல் அரிப்பு, இறப்பு, இறப்புக்கு பின் ரத்த கசிவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !