உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிருஷ்ணாம்பதி குளத்தில் கலக்கும் கழிவு நீர்; நாகராஜபுரத்தில் வாய்க்காலில் சங்கமிக்கும் அவலம்

கிருஷ்ணாம்பதி குளத்தில் கலக்கும் கழிவு நீர்; நாகராஜபுரத்தில் வாய்க்காலில் சங்கமிக்கும் அவலம்

கோவை; கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்துக்கு நொய்யல் ஆற்று தண்ணீர் கொண்டு வருவதற்காக, நீர் வழங்கு வாய்க்கால் துார்வாரப்பட்டது. நாகராஜபுரத்தில் வேடபட்டியில் இருந்து வரும் கழிவு நீர், வாய்க்காலில் மழைநீரோடு நேரடியாக கலக்கிறது. அதனால், கிருஷ்ணாம்பதி குளத்துக்கு கருப்பு நிறத்தில் கழிவு நீர் வருகிறது. தென்மேற்கு பருவ மழையால், புதுக்குளம், கோளராம்பதி குளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண் சமுத்திரம், குனியமுத்துார் செங்குளம், குறிச்சி குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நரசாம்பதி குளத்துக்கும் இரு நாட்களாக தண்ணீர் செல்கிறது.கிருஷ்ணாம்பதி குளத்துக்கு மூன்று வழித்தடங்களில் நொய்யல் ஆற்று தண்ணீர் வரும். கரும்பு இனப் பெருக்க மையம் அருகே உள்ள வழித்தடத்தில் குளத்துக்குள் தண்ணீர் நுழையும் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி, கம்பி வலை பொருத்தினால், கழிவுகள் குளத்துக்கு வருவதை தடுக்கலாம். நாகராஜபுரம் வரை நொய்யல் ஆற்று நீர் செந்நிறத்தில் வருகிறது. அப்பகுதியில், வேடபட்டியில் இருந்து சாக்கடை கழிவு நீர், வாய்க்காலில் நேரடியாக கலக்கிறது. அதனால், மழை நீரும் கழிவு நீரும் கலந்து கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வருகிறது. குளத்துக்கு வரும் நீர் கருப்பு நிறத்தில் இருப்பதால், கழிவு நீர் கலப்பதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.கிருஷ்ணாம்பதி மற்றும் செல்வம்பதி குளங்களுக்கு பின், முத்தண்ணன் என்கிற குமாரசாமி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். இக்குளத்துக்கு தண்ணீர் எடுத்து வர வேண்டிய நீர் வழித்தடம் புதர்மண்டியிருக்கிறது. அடுத்த இலக்காக இவ்வழித்தடத்தையும் துார்வார கவனம் செலுத்த வேண்டும்.இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''நரசாம்பதி மற்றும் கிருஷ்ணாம்பதி குளங்களுக்கு அதிகமான தண்ணீர் அனுப்ப அறிவுறுத்தியுள்ளேன். கிருஷ்ணாம்பதி குளத்துக்கு நீர் வரும் வழித்தடத்தை ஆய்வு செய்தோம். முதலில், வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவு நீரை மழை நீர் தள்ளிக்கொண்டு வரும். அதன் பிறகே ஆற்று நீர் நேரடியாக வந்தடையும். வாய்க்காலில் வரும் நீரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நொய்யல் தண்ணீர் விரைவில் குளத்தை வந்தடையும். ''பாதாள சாக்கடை திட்டம் ஐந்தாவது மண்டலத்தில் வேடபட்டி பகுதியில் குழாய் பதித்து இணைப்பு வழங்கும் போது, வாய்க்காலுக்கு கழிவு நீர் வராது,'' என்றார்.

'நீர்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கணும்'

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறியதாவது:தென்மேற்கு பருவ மழை முன்னரே துவங்கியிருக்கிறது. அதனால், பருவ மழை காலத்துக்குள் கோவையில் உள்ள குளங்கள் நிரம்பி வழியும் என்கிற நம்பிக்கை உள்ளது. நீர்வளத்துறைக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, வாய்க்கால் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.உக்கடம் பெரியகுளத்துக்கு வரும் வாய்க்கால்களில், நீரோட்டத்துக்கு எதிராக, அதன் வாட்டத்துக்கு எதிராக பாலங்கள் உள்ளன. சகதி மற்றும் குப்பை அடைத்துக் கொள்வதால், ஆண்டுதோறும் பிரச்னை ஏற்படுகிறது. தண்ணீர் அதிகமாக வரும்போது, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனிக்குள் புகுந்து விடுகிறது. வாய்க்கால் குறுக்கே உள்ள சில கல்வெட்டுகள், நீரோட்டத்தின் வாட்டத்தை விட குறைவாக இருப்பதால், குப்பை தங்கிக்கொள்கிறது மற்றும் கழிவுநீர் செல்வதால், இந்த வாய்க்கால்களை கான்கிரீட் வாய்க்கால்களாக மாற்றலாம். புட்டுவிக்கி ரோட்டில், பொம்மை கடை அருகே டிரான்ஸ்பார்மர், ஆக்கிரமிப்பு வீடுகள் இருப்பதால், அப்பகுதியில் வாய்க்கால் துார்வாருவது கடினமாக உள்ளது. வெள்ளலுார் குளத்துக்கு வரும் வாய்க்காலில் இடையூறுகள் அதிகமாக உள்ளன. நீர் வழித்தடத்தின் மீது, குறுக்கும் நெடுக்குமாக மின் ஒயர்கள் செல்வதால், இந்த வாய்க்கால் துார் வாருவது கடினமாக இருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் குறுகலாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ