விநாயகர் சிலை விசர்ஜனத்தில் நீர்நிலைகள் மாசடைய கூடாது
கோவை; விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் சூழலில், வழிபாட்டுக்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை, இயற்கை பொருட்களால் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதை மக்கள் பின்பற்ற, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், மக்களுக்கு பெரும்பங்கு உண்டு. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் நிறைவில், விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தின்போது, நீர்நிலை மாசடையக்கூடாது. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் அறிவுறுத்தியுள்ள நீர் நிலைகளில் மட்டுமே, சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும். விசர்ஜனம் செய்யும் போது, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டியுள்ள நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, களிமண், கிழங்கு மாவுகளால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும். நச்சு மற்றும் மக்காத, ரசாயன எண்ணெய் வகைகளை பயன்படுத்தக்கூடாது. எனாமல், செயற்கை சாயம் பயன்படுத்தக்கூடாது. நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.