ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கணும் !
வால்பாறை: சிறுவனை கடித்துக்கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.,பங்களா பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ரோஜாவெல்லி - ஷாஜிதாபேகம் தம்பதியின் இளயமகன் சைபுல்ஆலம், 5, கடந்த 6ம் தேதி இரவு, வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது, சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனையடுத்து, வனத்துறை சார்பில் சம்பவம் நடந்த எஸ்டேட் பகுதியில் நான்கு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு, வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஆனால், 10 நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தையைப்பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது: ஆட்கொல்லி சிறுத்தையைப்பிடிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியை சிறுத்தை நாள் தோறும் சுற்றி வருகிறது. இதனால், மீண்டும் அசம்பாவிதம் நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் உடனடியாக சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும். தவறினால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, கூறினர்.