உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தாடையணிந்து, பட்டாசு வெடித்து... குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்!

புத்தாடையணிந்து, பட்டாசு வெடித்து... குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்!

கோவை: புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் மக்கள் நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அதிகாலை எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, வெந்நீரில் நீராடி கங்கா ஸ்நானத்தை நிறைவு செய்தனர். இறை வழிபாடு மேற்கொண்டனர். புத்தாடை, இனிப்புகளை வைத்து வழிபாட்டுக்குப் பின் இனிப்பு உட்கொண்டு, பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். பிற மதத்தவர்களுக்கு இனிப்பு வழங்கி, அன்பை வெளிப்படுத்தினர். பிரியாணி கடையில்... கோவை நகரிலுள்ள பிரியாணி கடைகளில், தீபாவளியை முன்னிட்டு, பக்கெட் பிரியாணிக்கு வேஷ்டி, சட்டை இலவசம் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. சில பிரியாணி கடைகளில் சலுகைகளையும், இலவசங்களையும் வழங்கியதால் மக்கள் மொய்த்தனர். இறைச்சி வாங்க கூட்டம் ஒரு கிலோ ஆட்டிறைச்சி வாங்கினால், கால் கிலோ கோழி இறைச்சி தருவதாகவும், ஒரு கிலோ கோழி வாங்குவோருக்கு, 4 கோழி முட்டை இலவசம் எனவும் அறிவித்திருந்தனர். இன்னும் சிலர், ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800க்கு கொடுப்பதாக அறிவித்திருந்ததால், இறைச்சி வாங்க காலையிலேயே, பையுடன் காத்திருந்தனர். கோயில்களில் தரிசனம் புலியகுளம் முந்திவிநாயகர், ஈச்சனாரி விநாயகர், மஹாலட்சுமிமந்திர், மருத மலை, ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள், சாய்பாபாகோவில், பேரூர் பட்டீசுவரர், கோனியம்மன், தண்டுமாரியம்மன், உக்கடம் லட்சுமிநரசிம்மர் கோயில்களில் பக்தர்கள் திரண்டிருந்தனர். ஈஷா யோகா மையத்தில், நேற்று ஏராளமானோர் திரண்டிருந்தனர். காந்திபுரத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்சை பிடிக்க பலரும் வரிசையில் காத்திருந்தனர். கூர்நோக்கு இல்லத்தில் கலெக்டர் லட்சுமி மில் அருகே உள்ள கூர் நோக்கு இல்லம், சுங்கம் பைபாஸ் சாலையிலுள்ள ஆதரவற்றோர் இல்லம், சத்தி சாலையிலுள்ள மூத்தோர் இல்லத்துக்கு சென்று புத்தாடை, இனிப்பு, பட்டாசு கொடுத்த கலெக்டர் பவன்குமார், தீபாவளியை அவர்களுடன் கொண்டாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ