கோவை; தமிழக அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியில், முன்னாள் மேயர் வார்டில், மாநகராட்சி சார்பில் புதிதாக போடப்பட்ட தார் ரோடு, சில மாதங்களிலேயே பிளந்து விட்டது. இது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை, குடிநீர், காஸ் குழாய், மின் புதை வடம் மற்றும் தொலைத்தொடர்பு ஒயர்கள் பதிக்க, ஆங்காங்கே ரோடுகள் தோண்டப்படுகின்றன. இவற்றை சீரமைக்க, முதலில், 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அந்நிதி போதுமானதாக இல்லை என கூறியதால், மேலும், 200 கோடி ரூபாயை சிறப்பு நிதியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கினார். 502 கி.மீ., துாரத்துக்கு, 3,486 ரோடுகள் எடுக்கப்பட்டு, 'டெண்டர்' கோரி பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையின்றி, தார் ரோடு போடப்படுகிறது. இதுபோன்ற ரோடுகள், சில நாட்களிலேயே கீழிறங்கி விடுகிறது. விரிசல் ஏற்பட்டு, நாளடைவில் பிளந்து விடுகிறது. முன்னாள் மேயர் வார்டில்... வடக்கு மண்டலத்தில், முன்னாள் மேயர் கல்பனா கவுன்சிலராக உள்ள, 19வது வார்டில், நல் லாம் பாளையம் முதல் மணிய காரன்பாளையம் செல்லும் ரோட்டில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அக்குழியை சரிவர மூடாமல், 600 மீட்டர் துாரத்துக்கு அவசர அவசரமாக தார் ரோடு போடப்பட்டது. சில மாதங்களிலேயே அந்த ரோடு தற்போது விரிசல் ஏற்பட்டு, பிளந்துள்ளது. இவ்வழியாக, பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மாநகராட்சியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து செல்கின்றனர். அலட்சியமே காரணம் மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளின் அலட்சியமே, இதுபோன்ற தவறுகள் தொடர்வதற்கு காரணம். புதிதாக தார் ரோடு போடும் இடங்களில், அதிகாரிகள் கள ஆய்வு செய்வதில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும், இதுபோன்ற தவறுகளுக்கு காரணமான ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் பொறியாளர்கள் மீது, துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''சம்பந்தப்பட்ட ரோடு வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. விரிசலுக்கான காரணத்தை கண்டறிய, பொறியாளர்கள் நேரில் சென்றுள்ளனர்,'' என்றார்.