உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை குற்றாலம் திட்டம் என்னாச்சு? அரசின் ஒப்புதலுக்கு 5 மாதமாக காத்திருப்பு

கோவை குற்றாலம் திட்டம் என்னாச்சு? அரசின் ஒப்புதலுக்கு 5 மாதமாக காத்திருப்பு

தொண்டாமுத்துார்; சுற்றுலா பயணிகளைகவரும் வகையில், கோவை குற்றாலத்தை ரூ.2.20 கோடியில் மேம்படுத்த திட்டமிட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு மார்ச் மாதம் அனுப்பிய கருத்துருவுக்கு இன்னும் அனுமதி கிடைக்காததால், கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, திங்கள்கிழமை தவிர, மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். 1,000 சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்கள் மற்றும் கோடை காலங்களில், 3,000 முதல் 4,000 பேர் வரை வந்து செல்கின்றனர். வனத்துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. போளுவாம்பட்டி சூழல் சுற்றுலா மூலம், 40 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் ஜிப் லைன் சாகச விளையாட்டு, ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு மூலம் நடந்து செல்லும் வசதி, சேதமடைந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்த, 2.20 கோடி ரூபாயில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மார்ச் மாதம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 5 மாதமாகியும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. சூழல் சுற்றுலா மூலமே வனத்துறைக்கு வருமானம் கிடைக்கிறது. பணிபுரியும் மலைவாழ் மக்கள், தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுலா தளத்தில் புதிய வசதிகள் ஏற்படுத்தினால் மட்டுமே, சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க முடியும். இதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை