உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணம் என்ன? அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் 

 கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணம் என்ன? அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம் 

கோவை: அம்மன்குளம் பகுதியை சேர்ந்த, அண்ணாதுரை, சங்கீதா தம்பதி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும், கர்ப்பம் தரித்ததால், 22ம் தேதி 26 வார கர்ப்பிணியாக அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு சங்கீதா வந்துள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக கருவில் உள்ள சேயும், தாயும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி உடனடியாக அட்மிட் செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி, 29ம் தேதி இரவு உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். உறவினர்கள் கூறுகையில், 'குடும்ப கட்டுப்பாடு செய்தும் கரு தரித்தது எப்படி என புரியவில்லை. வயிற்று வலியால் மருத்துவமனைக்கு வந்தார்; நலமாக இருப்பதாக தெரிவித்தனர். திடீரென்று இறந்துவிட்டதாக கூறுகின்றனர். இரண்டு குழந்தைகள் அனாதையாக நிற்கின்றனர். அறுவை சிகிச்சை செய்து தையல் போட்ட இடத்தில், மலம், சிறுநீர் வெளியேறி பின்னர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். பதில் கிடைக்காமல் உடலை வாங்கமாட்டோம், '' என்றனர். டீன் கீதாஞ்சலி கூறியதாவது: உயர் ரத்த அழுத்த சிக்கல்களுடன் அக். மாதம் ஒரு முறையும், டிச. முதல் வாரமும் பரிசோதனைக்கு வந்துள்ளார். அட்மிட் ஆன இரண்டு நாட்கள் மருந்துகளால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தது. மூன்றாவது நாள் மருந்து கொடுத்தும் அதிகரித்தது. சேயும், தாயும் ஆபத்தில் இருந்ததால் அவசர அறுவை சிகிச்சை செய்தோம். குழந்தை இறந்தே பிறந்தது. 26 வார சிசு 800 கிராம் இருக்கவேண்டும். இக்குழந்தை, 360 கிராம் மட்டுமே இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் தாய் நலமுடனே இருந்தார், 27ம் தேதி மதியம் தையல் பிரித்து காயத்தை பார்க்கும் போது அங்கு மலம் வெளியேறியது தெரிந்தது. பிற துறை டாக்டர்களின் பரிந்துரை படி, மாலை 5:00 மணிக்கு மீண்டும் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வயிற்று பகுதியில் அதிக கொழுப்பு படிந்து இருந்தது. அதன்பின், ஒன்றரை நாள் நலமுடன் இருந்தார். 29ம் தேதி மாலை 4:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு டாக்டர்கள் சரி செய்தனர். மீண்டும், இரவு 1.25 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். அனைத்து சிகிச்சைகளும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளன. எந்த அலட்சியமும் கிடையாது. உடனடியாக விசாரைணயும் நடத்தினோம். இவ்வாறு, டீன் கூறினார்.

கு.க. ஆபரேஷன் தோல்வி

''குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி என்பது 0.1 சதவீதம் என்பது இயல்பானது. அதற்கு அரசு இழப்பீடு கொடுப்பதும் உண்டு. இதில் பழைய கோப்புகளை பார்க்க சொல்லியிருக்கிறேன்'' என டீன் கீதாஞ்சலி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ