உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைக்கு தடுப்பூசி எப்ப போடணும்! எல்லாமே யூ-வின் செயலி சொல்லும்

குழந்தைக்கு தடுப்பூசி எப்ப போடணும்! எல்லாமே யூ-வின் செயலி சொல்லும்

- நமது நிருபர் - கோவை மாவட்டத்தில், 'யூ-வின் செயலி' வாயிலாக, குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.'டிஜிட்டல்' முறையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பதிவு மற்றும் 'டிராக்கிங்' செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி, 'யூ-வின்'. கடந்த காலங்களில், தடுப்பூசி அட்டவணை புத்தகமாகவும், அட்டவணையிலும் தரப்பட்டது.தற்போது, 'யூ-வின் செயலி' வாயிலாக, கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் பதிவு செய்துவிட்டால், குழந்தைக்கு குறிப்பிட்ட வயது ஆகும் வரை, தடுப்பூசி செலுத்தவேண்டிய தேதி, எந்த தடுப்பூசி எப்போது போடவேண்டும் என்பதை, மொபைல்போன் வாயிலாகவே அறிந்துகொள்ள முடியும்.மேலும், தடுப்பூசி செலுத்தியவுடன் டிஜிட்டல் சான்றிதழ்களை டவுன்லோடு செய்துகொள்ளமுடியும். விடுபட்டால் மீண்டும் செலுத்தும் வரை கண்காணிக்கப்படுகிறது.நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசியை குழந்தைகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு போட்டுக்கொள்வதால், குழந்தைகள் ஆரோக்கியம் காக்கப்படும். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமியிடம் கேட்டபோது, ''12 வகையான தடுப்பூசி, 13 வகையான நோய்களுக்கு செலுத்தப்படுகிறது. கோவையில், 504 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் அப்பகுதியில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பட்டியலின் படி, தடுப்பூசி செலுத்தவேண்டிய பட்டியல் தயார் செய்து, புதன்தோறும் தடுப்பூசி செலுத்துகின்றனர்.மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு வாரமும், ஆயிரம் முதல் 1,100 குழந்தைகள் வரை தடுப்பூசி செலுத்துகின்றனர். விடுபடும் குழந்தைகள் 'யூ-வின் செயலி' உதவியோடு கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !