எமதர்மராஜா கோவில் திறப்பு எப்போது? இரு தரப்பினர் தகராறால் மூடல்; பக்தர்கள் சங்கடம்
போத்தனூர் ;கோவை வெள்ளலூரில் பழமையான எமதர்மராஜா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி நாளில் சிறப்பு வழிபாடு நடக்கும். மாநிலம் முழுவதுமிருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.இந்நிலையில், தற்போது கோவில் அமைந்துள்ள இடம் தங்களுடையது என ஒரு தரப்பும், கோவிலுக்கு சொந்தம் என, மற்றொரு தரப்பும் சொந்தம் கொண்டாடின.இதையடுத்து, கடந்தாண்டு கோவில் பூட்டப்பட்டு சித்திரை பவுர்ணமி தின சிறப்பு வழிபாடு எதுவும் நடக்கவில்லை. பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.நேற்று சித்திரை பவுர்ணமி என்பதால், எப்படியும் கோவில் திறந்திருக்கும் என எதிர்பார்த்து வந்த பக்தர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.கோவில் கேட் முன் பூஜை பொருட்களை வைத்து, வழிபட்டனர். தொடர்ந்து அருகேயுள்ள சித்திர, புத்திர எமதர்மராஜாவின் சகோதரி ஆண்டிச்சியம்மாள் அய்யனார் கோவிலில் வழிபட்டனர்.பவுர்ணமி முன்னிட்டு இக்கோவில் மூலவருக்கு, நேற்று காலை மலர் அலங்கார வழிபாடு, மதியம் உச்சிகால பூஜை, மாலை பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. காலை முதல் இரவு வரை, அன்னதானம் வழங்கப்பட்டது. எமதர்மராஜாவின் உருவ பிளக்ஸ் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.இன்று காலை அலங்கார பூஜை மற்றும் உச்சிகால பூஜை, மறு பூஜை, அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.பக்தர்கள் சிலர் கூறுகையில், 'மன நிம்மதிக்காக கோவிலுக்கு வருகிறோம். இங்கு இரு தரப்பு பிரச்னையால் கோவில் பூட்டப்பட்டுள்ளது. விரைவில் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.