மின் இணைப்பு துண்டிப்பு எப்போது; மீண்டும் துவங்குகிறது ஆக்கிரமிப்பு
கோவை; கோவை மாநகராட்சி, 50வது ராமலிங்கபுரத்தில், சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளில் வசித்தவர்கள் காலி செய்த போதிலும், அக்கட்டங்களை, நகரமைப்பு பிரிவினர் இன்னும் இடிக்காமல் உள்ளனர்.கோவை மாநகராட்சி, 50வது வார்டில் உடையாம்பாளையம் கண்ணபிரான் மில்ஸ் அருகே ராமலிங்கபுரம் உள்ளது. இங்குள்ள, 40 அடி ரோட்டை ஆக்கிரமித்து, ஓட்டு வீடுகள் கட்டி, பலரும் குடும்பத்துடன் வசித்தனர். சிலர் கடை மற்றும் மெஸ் நடத்தினர். அப்பகுதியில், ஒரு கோவிலும் உள்ளது.சாலையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, கீரணத்தத்தில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்து விட்டனர். ஒரே ஒரு வீட்டில் மீண்டும் புதிதாக மேற்கூரை வேயப்பட்டு, மீண்டும் வசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆக்கிரமிப்புகள் உருவாகாத வகையில், அனைத்து கட்டடங்களையும் ஒரே நாளில் இடித்து அகற்றி, தார் சாலை அமைத்தால், சாலை விரிவாகும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரியிடம் கேட்டதற்கு, ''கண்ணபிரான் மில் அருகே சாலையோர ஆக்கிரமிப்பாக இன்னும் எட்டு வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்க வேண்டியிருக்கிறது; மின்வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். மின் இணைப்பை துண்டித்ததும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும்,'' என்றார்.