உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பது ஏன்? வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அச்சம்

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பது ஏன்? வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அச்சம்

பெ.நா.பாளையம்:கோவை மாநகராட்சி உடன் கோவை வடக்கில் உள்ள குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை இணைக்க, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கோவை மாநகராட்சி கடந்த, 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது பழைய மாநகராட்சி பகுதிகளுடன் 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன.

எதிர்ப்பு

தற்போது, 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடப்பட்டி, இருகூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகள் நீலம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி கீரப்பாளையம் ஆகிய, 9 ஊராட்சிகள் என மொத்தம், 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படுகின்றன. இதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அனுமதி கிடைக்காது

இது குறித்து குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில்,' குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சிகளில், 100 நாள் வேலை திட்டத்தில் ஏராளமானோர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து, பணி செய்து வருகின்றனர். மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டால், இத்திட்டம் நிறுத்தப்படும். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர்.தற்போது, ஊராட்சிகளில் வீட்டு மனைகள் வரன்முறை படுத்தும் திட்டத்தில் சதுர அடி ஒன்றுக்கு ஒரு ரூபாய் கட்டணம் உள்ளது. மாநகராட்சியாக மாறினால் ஒரு சதுர அடிக்கு, 10 ரூபாய் கட்டணம் வரை நிர்ணயம் செய்யப்படும். தற்போது உள்ள ஊராட்சிகளில் கட்டுமான பணிக்கு அனுமதி உடனடியாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியாக மாறும்போது கட்டுமான பணிக்கான அனுமதி பெறுவது குதிரைக்கொம்பாக மாறிவிடும். ஊராட்சிகளில் வீடு கட்டும்போது காம்பவுண்ட் சுவரில் இருந்து வீடு, 3 அடி இடைவெளி இருந்தால் போதுமானது. மாநகராட்சி என்றால் ஐந்து அடி விட வேண்டும். இரண்டே முக்கால் சென்ட் நிலத்தில் வீடு கட்டும் நபரால் வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவருக்கும், 5 அடி இடைவெளி விடுவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். தற்போது, மத்திய, மாநில அரசுகள் ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட, 2.65 லட்சம் ரூபாய் மானியமாக ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குகிறது. மாநகராட்சியாகும் போது இத்திட்டம் பொதுமக்களுக்கு கிடைக்காது. இதனால் குறுகிய பட்ஜெட்டில் வீடு கட்டும் ஏழைகளின் கனவு கனவாகவே போய்விடும். மேலும், விவசாய கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு திட்டங்கள் மாநகராட்சியில் வசிப்போருக்கு கிடைக்காது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும், வரி உயரும் அடிப்படை வசதிகளுக்கான தீர்வு உடனடியாக கிடைக்காது' என்றனர்.

ஆளும் கட்சியினர் நம்பிக்கை

கடந்த, 2011ம் ஆண்டு துடியலூர், வெள்ளக்கிணர் பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு அப்பகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்நிலையில் குருடம்பாளையம், அசோகபுரம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற எண்ணம் இப்பகுதியில் வசிக்கும் சுமார், 40 ஆயிரம் வாக்காளர்களின் மன நிலையாக உள்ளது. வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவ்வாக்குகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்தால், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆளும் கட்சியின் வெற்றியை அது பாதிக்கும் என, தி.மு.க., வினர் அரசியல் கணக்கு போடுவதால், இப்பிரச்னையில் தி.மு.க., நன்கு யோசித்தே செயல்படும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ