உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்னையை போன்று பணி விலக்கு கிடைக்குமா? வயதான போலீசார் எதிர்பார்ப்பு

சென்னையை போன்று பணி விலக்கு கிடைக்குமா? வயதான போலீசார் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி; சென்னை பெருநகரத்தில், ஓய்வு பெற உள்ள போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு கொடுத்தது போன்று, தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துதல், போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல் என பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதில், 50 வயதுக்கு கடந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.பாதுகாப்பு பணி, கோர்ட், வெளியூர் பாதுகாப்பு பணி என, பல பணிகளை கவனித்து வந்த போலீசார், வயது மூப்பு காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்டுள்ளனர்.அதில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக நேரம் நிற்பதால் கால்களில் வலி போன்ற பல்வேறு பிரச்னைகளால் சிரமப்படுகின்றனர்.பெரும்பாலும், வயதான போலீசாருக்கு இரவு நேரப்பணியும், வெளியூர் பாதுகாப்பு பணியும் அதிகளவு வழங்கப்படுகின்றன. மன உளைச்சலில் உள்ள போலீசார், ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களுக்காவது விலக்கு அளித்தால் பயனாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.வயதான போலீசார் கூறியதாவது:இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகள் அந்த காலங்களில் இல்லை. ரெக்கார்டு உயர் அதிகாரிகளுக்கு கொடுப்பது முதல், அனைத்து பணிகளுக்கும் நேரடியாக சென்று வர வேண்டும்.போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் உள்ள குற்ற சம்பவங்கள், போராட்டம் உள்ளிட்ட சட்டம், ஒழுங்கு பிரச்னைகளையும் கவனித்துக்கொண்டே, உயர் அதிகாரிகளுக்கு தர வேண்டிய தகவல்களை வழங்கி வந்தோம்.வயது மூப்பினை கவனத்தில் கொள்ளாமல், வெளியூர்களில் நடைபெறும் திருவிழாக்கள், முக்கிய வி.ஐ.பி.,க்கள் வருகைக்காக பாதுகாப்பு பணி உள்ளிட்ட, அனைத்து பணிகளும் வழங்கப்படுகின்றன. பாதுகாப்புக்கு நிற்கும் போது, அங்கு இயற்கை உபாதைக்கு செல்லக்கூட வசதிகள் இல்லாததால் சிரமமாக உள்ளது.வி.ஐ.பி.,க்கள் வந்து செல்லும் வரை அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல முடியாது; உட்கார கூட வசதியில்லாமல் நின்று கொண்டே இருக்க வேண்டும்.கூடுதல் பணிச்சுமையால் ஒரு சில போலீசார் உடல் ரீதியாக மேலும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வெளியூர் பணிகளுக்கு இளம் வயதில் உள்ள போலீசாரை அனுப்ப வேண்டும்.அதே போன்று, சென்னை பெருநகரத்தில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெற உள்ள, 59வயது நிரம்பிய சிறப்பு எஸ்.எஸ்.ஐ.,க்கள் முதல் போலீசார் வரை அனைவருக்கும், அவர்களது வயது, மக்கள் பணியை கவனத்தில் கொண்டு, இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.அந்த உத்தரவை, தமிழகம் முழுவதும் செயல்படுத்தினால், எங்களுக்கும் பயன் கிடைக்கும். எனவே, உயர் அதிகாரிகள் எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றினால், நிம்மதி அடைவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 02, 2025 03:31

பயப்பட வேண்டாம்....அடுத்தது தாமரை ஆட்சி தான்....முதல்வராக வருபவர் ஒரு ரிடெர்ட்டு IPS Officer....அவருக்கு தெரியும் காவல்துறையின் குறை நிறைகள்.... அவர் பார்த்துப்பார்....ஒரே வேண்டுகோள்....சோம்பேறித்தனமாக இருக்காமல் ஓட்டு போடவேண்டும் அவ்வளவே....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை