பொள்ளாச்சி: பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகே எருமைப்பாறை மலை கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க, கோட்ட அளவிலான வனக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, மாவட்ட குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அரசு துரித நடவடிக்கை எடுத்தால், இருளில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் கிடைக்கும். பொள்ளாச்சி அருகே, ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம், டாப்சிலிப் பிரிவு துாணக்கடவு காப்புக்காட்டில், காடர் பழங்குடியின மக்கள் வசதிக்கும் எருமைப்பாறை பகுதி உள்ளது. இங்குள்ள மலை கிராமத்தில் வன உரிமைச்சட்டத்தின் கீழ் குடியிருப்பு நில உரிமை பெற்ற, 36 குடும்பங்கள் வசிக்கின்றனர். மின் வசதி இல்லாத இந்த மலை கிராமத்துக்கு, மின் இணைப்பு வழங்க, 'ஆன்லைன்' வாயிலாக, 27 குடும்பங்கள் தலா, 3,800 ரூபாய் வைப்புத்தொகையை மின்வாரியத்துக்கு செலுத்தினர். மின்வாரியத்தால் மின் இணைப்பு வழங்க முன்மொழிவு சமர்பிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் நிறுவப்பபட்ட நிலையில், வனத்துறை தடையில்லா சான்று வழங்க மறுத்துவருவதால் மின் இணைப்பு வழங்குவது தடைபட்டது. டாப்சிலிப்பில் அரசு தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணியர் தங்கிச் செல்வதற்காக அறைகளில் மின் வசதி உள்ளது. அதன் அருகே, 200 மீட்டர் துாரத்தில் உள்ள எருமைப்பாறைக்கு மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது. பழங்குடியின மக்கள் கூறுகையில், 'வன உரிமை சட்டத்தில் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். எங்களது இருள் காலத்துக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்,' என்றனர். வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது: எருமைப்பாறை குடியிருப்பில், 63 கே.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. வனவிலங்கு நடமாட்டத்தக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், குறைந்தழுத்த புதைவடப்பாதை மற்றும் வீட்டு மின் இணைப்புகள் என மொத்தம், 3,825 ச.மீ., இடம் மட்டுமே தேவைப்படுகிறது. இதற்கு, ஒரு மரமும் கூட வெட்ட வேண்டியதில்லை. எருமைப்பாறை கிாம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது. கோட்ட அளவிலான வனக்குழுவில் முடிவு செய்து, மாவட்ட வனக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு, கூறினர்.