கலெக்டர் நிர்ணயித்த கூலி வழங்கப்படுமா! துாய்மை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
கோவை: கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.துாய்மை பணியாளர்களின் வாழ்வுரிமை மீட்டெடுக்கும் சங்கங்களின்கூட்டமைப்பு தலைவர் வினோத், பொது செயலாளர் ஸ்டாலின் பிரபு, ஒருங்கிணைப்பாளர் கோதண்டன், மகளிரணி காயத்ரி ஆகியோர், மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமாரை சந்தித்து பேச்சு நடத்தினர்.அப்போது கொடுத்த மனுவில், 'கோவை மாநகராட்சியில், 4,203 ஒப்பந்த பணியாளர்கள், 795 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 700 டிரைரவர்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிகின்றனர். தினக்கூலியாக, 648 ரூபாய் வழங்க, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, 486 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 415 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள, 71 ரூபாய் எங்கே. அத்தொகை எங்கே சென்றது என தெரியவில்லை. இதன்படி, ஒன்பது மாதத்துக்கு கணக்கிட்டு, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.745 வழங்க வேண்டும்' என கூறியுள்ளனர்.இதுதவிர, தீபாவளி பண்டிகை சமயம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.4,700 போனஸ் வழங்க பேச்சில் முடிவெடுக்கப்பட்டது. ஒப்பந்த நிறுவனத்தால் அத்தொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.இதுதொடர்பாக விசாரித்த துணை கமிஷனர் சிவக்குமார், ஒப்பந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் பணியாற்றிய நாட்கள், வழங்கிய போனஸ் தொகை மற்றும் கணக்கிட்ட விபரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட, ஒப்பந்த நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தினார்.மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, துணை கமிஷனர் தெரிவித்தார்.