போத்தனுாரில் குடிநீருக்காக குடங்களுடன் திரண்ட பெண்கள்
போத்தனூர்; கோவை, வெள்ளலூர் பேரூராட்சியின், 12வது வார்டுக்குட்பட்டது, கிருஷ்ணா நகர். இங்கு குடிநீர், வாரம் ஒருமுறை ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை, வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகம், 10 -- 15 நாட்களுக்கு ஒருமுறையாக மாறியது. இந்த இடைவெளி, கடந்த இரு மாதங்களாக. 20 நாட்களாக மாறியதால், மக்கள் கடும் அவதியடைந்தனர். கடந்த வாரம் பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டதால், மறுநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, மீண்டும் பிரச்னை தலைதூக்கியது. நேற்று காலை, 20க்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன், போத்தனூர் -- செட்டிபானையம் சாலை சந்திப்பில் கூடினர்.தகவலறிந்த போத்தனூர் போலீசார், வெள்ளலூர் பேருராட்சி செயல் அலுவலர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று, மக்கள் கலைந்து சென்றனர்.செயல் அலுவலர் கூறுகையில், 'கிருஷ்ணா நகர் மற்றும் மலுமிச்சம்பட்டி பஞ்..க்கு ஒரே பிரதான குழாய் வாயிலாக, தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அழுத்தம் குறைவால், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதனை தவிர்க்க, இரு பகுதிகளுக்கும் தனித்தனியே சப்ளை செய்ய, குடிநீர் வாரியத்திடம் கூறப்பட்டுள்ளது. 'சம்ப்' கட்டி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு, குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் அழுத்தத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.