ரூ.90.75 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
கோவை, ; மாநகராட்சி பகுதிகளில் ரூ.90.75 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகள் துவக்கிவைக்கப்பட்டும், ரூ.4.88 கோடியில் முடிவுற்ற பணிகள் நேற்று திறந்தும் வைக்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நேற்று ரூ.90.75 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கிவைத்தார். ஆர்.எஸ்., புரத்தில்(72வது வார்டு) உள்ள மாதிரி பள்ளியில் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாணவர்கள் தங்கும் விடுதி, ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், அபிவிருத்தி கட்டணம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.21.55 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படவுள்ளது. வெள்ளலுார் உரக்கிடங்கு வளாகத்தில் தினமும், 250 மெட்ரிக் டன் மக்கும் குப்பையில் அழிக்கும் விதமாக ரூ.69.20 கோடி மதிப்பீட்டில் 'பயோ காஸ்' பிளான்ட் அமைக்கும் பணியையும் அமைச்சர் துவக்கிவைத்தார். காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளையும், ஆர்.எஸ்., புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 7.02 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.