கரடி தாக்கி தொழிலாளி காயம்; மருத்துவமனையில் சிகிச்சை
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது சிறுகுன்றா எஸ்டேட். இங்குள்ள 33 நெம்பர் தேயிலை தோட்டத்தில், நேற்று தொழிலாளர்கள் தேயிலை செடிக்கு உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த கரடி, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அமர்ஆரோன்,25. என்ற தொழிலாளியை தாக்கியது. சப்தம் கேட்ட தொழிலாளர்கள் கரடியை விரட்டி, தொழிலாளியை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இடது கை மற்றும் கால்களில் காயமடைந்த தொழிலாளிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து, தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் கரடி தாக்கி காயமடைந்த தொழிலாளியை நேரில் சந்தித்து, 5,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கரடி நடமாடிய தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்கக்கூடாது. கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில் கவனமாக தேயிலை பறிக்க வேண்டும்'என்றனர்.