கரடி தாக்கி தொழிலாளி காயம்; வனத்துறை சார்பில் நிவாரணம்
வால்பாறை; வால்பாறை அருகே, கரடி தாக்கியதில் காயமடைந்த தொழிலாளிக்கு, வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட் டாப்டிவிஷன், சோலைப்பாடி தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் சபரீஸ்வரன், 29, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு வீட்டிற்கு நடந்து செல்லும் போது, எதிரே வந்த கரடி அவரை தாக்கியது. இதில், படுகாயமடைந்த சபரீஸ்வரனை, சக தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் காயமடைந்த தொழிலாளிக்கு நிவாரணத்தொகையாக, 10,000 ரூபாய் வழங்கினர். வனத்துறையினர் கூறுகையில், 'இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், குழந்தைகள் மாலை நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, தொழிலாளர்கள் குறுக்கு வழித்தடத்தில் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். கரடியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,' என்றனர்.