அரசு மகளிர் கல்லுாரியில் பயிலரங்கு
கோவை; கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில், இளம்பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் சமூகத் திறன் எனும் தலைப்பில், பயிலரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் அனுஷ்மிதா செபாஸ்டின் பேசுகையில், ''மாணவியர் சமூகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள கற்க வேண்டும். அரசு கல்லுாரி தொழிலாளிகள் மகள்களின், உயர் கல்விக் கனவை நிறைவேற்றுகிறது. இக்கல்லுாரி இல்லை எனில், ஏழை மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும். பெண்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பணியில் ஈடுபடுவதை, ஆசிரியராகிய நாங்கள் பெருமையாக கருதுகிறோம்,'' என்றார். நிகழ்ச்சியின்போது, வழங்கப்பட்ட தலைப்புகளில் சிறப்பாக பேசிய மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி கிளப் ஆப் கோவை வெஸ்ட் தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 120 மாணவியர் பங்கேற்றனர்.