உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விசைத்தறி நவீனப்படுத்தும் மானிய திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

 விசைத்தறி நவீனப்படுத்தும் மானிய திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சோமனூர்: சாதா விசைத்தறிகளை நவீனப்படுத்தும் மானிய திட்டத்தில் சேர, இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க, கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். சாதா விசைத்தறிகளை நவீனப்படுத்த அரசு மானியம் வழங்க வேண்டுமென, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, விசைத்தறி நவீனமயமாக்குதல் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் குறித்து விளக்கும் கூட்டம், சோமனூர் விசைத்தறி சங்கத்தில் நடந்தது. கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது: இத்திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டு பழைய சாதா விசைத்தறிகளை, டக் இன் சாதனத்துடன் நாடா இல்லாத ரேப்பியர் தறிகளாக மாற்றலாம். புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல், பொது வசதி மையம் அமைத்தல், வடிவமைப்பு மையம், வார்ப்பிக், சைசிங் ஆலைகள், அடிப்படை தரப்பரிசோதனை உள்ளிட்ட இனங்களில் நலத்திட்டங்களை பெறலாம். விருப்பம் உள்ள விசைத்தறியாளர்கள், http://tnhandlooms.tn.gov.in/pms/Auth என்ற இணைய தள முகவரிக்கு சென்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பத்துக்கு, 10 விசைத்தறிக்குள் நவீனப்படுத்தி கொள்ளலாம். 60 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும். ஏற்கனவே நவீனப்படுத்தியவர்களும், இத்திட்டத்தில் சேர்ந்து மானியத்தை பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார். சோமனூர் சங்க தலைவர் பூபதி கூறுகையில், அரசின் திட்டத்தை வரவேற்கிறோம். ஒரு விசைத்தறியை நவீனப்படுத்த, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அரசு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இதில், 18 சதவீதம் ஜி.எஸ்.டி.க்கு சென்று விடுகிறது. அதனால், ஜி.எஸ்.டி. தொகையையும் அரசு ஏற்று கொண்டால் நல்லது. வங்கி கடன் ஏற்பாடு செய்து தந்தால், எங்களுக்கு பயன் தரும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ