இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்; விழிப்புணர்வு முகாமில் வேண்டுகோள்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலையில், இளம் வாக்காளர்கள் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், இளம் வாக்காளர்களர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களை புதிதாக சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லுாரியின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் வரவேற்றார். விழாவில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது: கல்லுாரி மாணவர்கள் அனைவரிடமும் 'இன்ஸ்டாகிராம்' கணக்கு உள்ளது. அது போல, வாக்காளர் அடையாள அட்டை இருக்க வேண்டும்.ஜனநாயக நாடு என்பதால், நாம் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். இளம் வாக்காளர்கள் ஆர்வமாக இணைந்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். இவ்வாறு, பேசினார். கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவக்குமார் முதன்மைக் கருத்தாளராக பங்கேற்று, இளம் வாக்காளர்கள் பதிவு செய்யக்கூடிய வழிமுறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: இளம் வாக்காளர்கள் பதிவு செய்வதற்குத் தேவையான ஆதார் கார்டு, பிறப்பு சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்து கொண்டு இணையதளம் வாயிலாகவும், வாக்காளர் பதிவு செய்யும் செயலி வாயிலாகவும் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, பேசினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இளம் வாக்காளர்கள் சேர்க்கை குறித்த, 'மாணவர் சங்கிலி' நடந்தது. பொள்ளாச்சி தேர்தல் பிரிவு தாசில்தார் தவமணி நன்றி கூறினார். ஆனைமலை ராமு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) விஜயராஜ், இளம் வாக்களாளர்கள் சேர்க்கை விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார். இதில், ராமு கல்லுாரி, கே.எம்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரியை சேர்ந்த, 300 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்தல் பிரிவு சார்பில், புதிய இளம் வாக்காளர்கள் பதிவுகளும் நடைபெற்றன. விழாவில், தேர்தல் தொடர்பான வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. வால்பாறை வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் வருவாய்த்துறை சார்பில், இளம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர் சேர்ப்பு குறித்த கூட்டம் நடந்தது. தாசில்தார் அருள்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட மேலாளர் மற்றும் துணை ஆட்சியர் ஜோதிசங்கர், தேர்தல் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி பேராசிரியர் முருகன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு கலந்து கொண்டு பேசியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் நடத்துவது மிகப்பெரிய சவாலாக ஒன்றாகும். நாட்டில், 87 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் மிக சிறப்பாக செயல்படுகிறது. புதிய வாக்காளர்கள் தங்களது விபரங்களை 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். இது வரை வாக்காளர் பட்டியிலில் இடம் பெறாதவர்கள், 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் அனைவரும் தவறாமல் புதிய வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியிலில் இடம் பெறச்செய்ய, மாணவர்கள், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, பேசினார். அதனை தொடர்ந்து இளம் வாக்காளர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியில் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.