மேலும் செய்திகள்
ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 'பாடம்'
21-Sep-2024
அணிந்ததால் 500 பேர் தப்பினர்ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினால், உயிர் தப்புவது உத்தரவாதம் என்பது, சமீப கால சாலை விபத்துக்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் சிக்கியவர்களில், 500க்கும் மேற்பட்டோர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்.கோவை மாநகரில், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நெரிசலும், விபத்துகளும் அதிகரித்துள்ளன.வேகமாக இயக்கப்படும் வாகனங்கள், கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து, வேகமாக வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் செப்., 18ம் தேதி வரை உயிரிழப்பு ஏற்படாத, 641 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் 500க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளனர்.641 பேரில் 500க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து சென்றதால்தான், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.இதேபோல், கோவை மாநகர் மேற்கு பகுதிகளில், இந்தாண்டு நடந்த, 53 விபத்துகளில் வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். அதில், 40 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.போலீசார் அபராதம் விதிப்பதில் இருந்து தப்பிக்க மட்டுமே, சிலர் ஹெல்மெட்டை பயன்படுத்துகின்றனர்.கல்லுாரி மாணவர்களுக்கு வாகனம் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அனைவரும், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்வதோடு, அணியவும் வலியுறுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர். 'உங்கள் உயிர் உங்கள் கையில்'
கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (போக்குவரத்து) அசோக் குமார் தெரிவிக்கையில், ''சாலையில் அவசரம் கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்வது அவசியம். 'நாம் சரியாகதான் செல்கின்றோம்; விபத்து ஏற்பட வாய்ப்பில்லை' என நினைக்கக்கூடாது.நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். பல விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபரின் தலை அல்லது முகத்தில் மட்டும் காயம் ஏற்பட்டிருக்கும். 'போலீசாருக்காக ஹெல்மெட் அணிய வேண்டாம்; உங்கள் உயிரை காக்க ஹெல்மெட் அணியுங்கள்' என்பதே, இளைஞர்களுக்கு நாங்கள் கூறும் மெசேஜ்.
ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் போலீசார் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 'உயிர்' அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இதில், கல்லுாரி மாணவர்களுடன் போலீசார் சேர்ந்து, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
n போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது குறைந்தபாடில்லை.n தற்போது, அதிக வேகமாக செல்லும் பல இரு சக்கர வாகனங்கள் வந்துவிட்டன. அவ்வகை வாகனங்களையே, இளைஞர்கள் பலர் வாங்க விரும்புகின்றனர்.n அதிவேகமாக செல்வதை 'கெத்தாக' கருதுகின்றனர். பலர் ஹெல்மெட்டை வாகனத்தில் மாட்டிக்கொண்டு செல்கின்றனர். தலையில் மாட்டி செல்வோரில் சிலர், 'கிளிப்' போடாமல் செல்வதாலும், தலைக்காயம் ஏற்படுகிறது.
21-Sep-2024