ஏரியில் முழ்கி சிறுவன் பலி பண்ருட்டி அருகே பரிதாபம்
பண்ருட்டி: பண்ருட்டி அருகே விளையாட சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்,40; கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு பிரசன்னா,7; என்ற மகனும், சுமித்தா,3; என்ற மகளும் உள்ளனர்.சிறுவன் பிரசன்னா, அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த பிரசன்னா, காலை 8:00 மணிக்கு விளையாட செல்வதாக கூறிவிட்டு வௌியே சென்றவர், காலை 9:30 மணிக்கு மேலாகியும் சாப்பிட வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர், கிராமம் முழுவதும் தேடினர். காலை 10:00 மணிக்கு அங்குள்ள ஏரியில் சிறுவன் மூழ்கிய தகவல் கிடைத்து, விரைந்து சென்று சிறுவனை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிறுவன் உடலை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.