காய்கறிகளால் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டி
கடலுார்; முதல்வர் பங்கேற்ற விழாவில், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளால் மாடுகளுடன் கூடிய, மாட்டு வண்டி வடிவமைத்து காட்சிப்படுத்தினர். கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், நேற்று அரசு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இந்த விழா அரங்கத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளால், உழவர்களை போற்றும் வகையில் மாடுகளுடன் கூடிய, மாட்டு வண்டி வடிவமைக்கப்பட்டது.இதில், பன்னீர் கரும்பு, கருணை கிழங்கு, பீட்ரூட் மூலம் வண்டி மற்றும் சக்கரம் வடிவமைத்துள்ளனர். இதேபோன்று, கத்தரிக்காய், முள்ளங்கியால் இரண்டு மாடுகளை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர். காய்கறிகளால் உருவாக்கப்பட்ட மாட்டு வண்டியை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.