ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கூடாரமாக மாறிய நிழற்குடை
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பஸ் நிழற்குடை புரோக்கர்களின் கூடாரமாக மாறியதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கடலுார், பண்ருட்டிக்கு செல்ல பஸ் ஏற காத்திருப்பது வழக்கம். இந்த பஸ் நிறுத்தில் உள்ள நிழற்குடை கடந்த சில மாதங்களாக புரோக்கர்கள் அதிகளவு உட்கார்ந்து கொண்டு திருமண பொருத்தம் பார்ப்பது, வீடு, மனை விற்பனை செய்வது சம்மந்தமாக தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நிழற்குடை முழுமையாக இவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவர்கள் ஓட்டி வரும் வாகனங்களை வழியிலேயே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் வெளியூர்களுக்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நிழற்குடையில் நிற்பதற்கு கூட இடமின்றி அவதியடைந்து வருகின்றனர்.எனவே, பஸ் நிறுத்த நிழற்குடை ஆக்கிரமிப்பவர்களை எச்சரித்து, பயணிகள் அச்சமின்றி பயன்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.