சிதம்பரத்தில் கலெக்டர் ஆய்வுப்பணி
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொணடார். சிதம்பரம் நகராட்சி லால்கான் தெருவில் ரேஷன் கடை, பஸ் நிலைய விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடத்தின் ஆலோசனை நடத்தினார். மேலும், அறிவு சார் மையம், நந்தனார் அரசு ஆண்கள் விடுதி, மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பள்ளி, தட்சன் குளம் ஆகிய பணிகளையும் பார்வையிட்டார். கலெக்டர் கூறுகையில், சிதம்பரம் நகராட்சியில் ரூ. 1.9 கோடியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையம் திறக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வர்களுக்கு தேவையான புத்தகங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.சிதம்பரம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளியில் காது கேளாதோர் 25, மனவளர்ச்சி குன்றியோர் 30, தொழிற்பயிற்சி 22 என மொத்தம் 77 மாணவர்கள் படிக்கின்றனர். ரூ. 95 லட்சம் மதிப்பீட்டில் தட்சன் குளம் சுற்றுசுவர் மேம்படுத்தி, அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது என்றார். நகராட்சி கமிஷனர் மல்லிகா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உடனிருந்தனர்.