விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு
பண்ருட்டி: பண்ருட்டியில் நடந்த லோக் அதாலத்தில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 80 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.விருத்தாச்சலம் வடக்கு வெள்ளூரை சேர்ந்தவர் சங்கர்,48; இவர், கடந்த 2023 செப் 16ம் தேதி இருசக்கர வாகனத்தில் மகள் ஸ்வேதாவுடன் பண்ருட்டி பனிக்கன்குப்பம் பகுதியில் சென்றார். அப்போது கார் மோதியதில் சங்கர் இறந்தார். இதுகுறித்து நஷ்ட ஈடு கோரி, கடலுார் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் மனைவி மகேஸ்வரி, தந்தை நாகமுத்து பண்ருட்டி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.நேற்று பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த லோக் அதாலத்தில், இறந்த சங்கர் குடும்பத்திற்கு ரூ. 80 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. அதற்கான உத்தரவு நகலை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சித்தார்த்தன், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி பிரவீன் குமார், வழக்கறிஞர் உறுப்பினர் அருண்குமார் வழங்கினர்.