| ADDED : டிச 07, 2024 07:41 AM
கடலுார்; ஓட்டல் உரிமையாளரை வெட்டி கொலை செய்த, டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.கடலுார், பீச் ரோட்டை சேர்ந்தவர் அருளரசு,48; இவர், கடலுார் புதுப்பாளையம், கான்வென்ட் தெருவில் ஓட்டல் மற்றும் டாஸ்மாக் கடை பார் நடத்தி வந்தார்.கடந்த 11.4.2014 அன்று பாருக்கு சென்ற தேவனாம்பட்டினத்தை சேர்ந்த டிரைவர் கணேஷ்,38; அங்கிருந்த ஊழியரிடம் தகராறு செய்தார். அவரை, அருளரசு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ஆத்திரம் தீராத கணேஷ், அன்று மாலை ஓட்டலுக்கு சென்று, அருளரசை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.புகாரின் பேரில், கணேசை கைது செய்த கடலுார் புதுநகர் போலீசார், அவர் மீது, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்ந்தனர்.கடந்த 2015ம் ஆண்டு பிப்., மாதம் ஜாமினில் வௌியே வந்த கணேஷ், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததன் பேரில் போலீசார் தேடியபோது, கணேஷ் இறந்துவிட்டதாக அவரது உறுவினர்கள் கூறினர். அவர்களின் மொபைல் போன் எண்களை ஆய்வு செய்ததில், கணேஷ், ஆந்திர மாநிலம் நகரியில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், குற்றம் சாட்டப்பட்ட கணேஷிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பக்கிரி ஆஜரானார்.