பணமில்லா பரிவர்த்தனை விவசாயிகளுக்கு அறிமுகம்
விருத்தாசலம்: கம்மாபுரம் வட்டாரத்தில், பணமில்லா பரிவர்த்தனை மூலம், மானிய விலையில் இடுபொருள் பெறும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.கம்மாபுரம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மூலம் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், ஜிப்சம், ஜிங் சல்பேட், வேளாண் கருவிகள் மற்றும் இதர இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.இதில், பணமில்லா பரிவர்த்தனை மூலம் ஏ.டி.எம்., கார்டுகள், யு.பி.ஐ., எண், போன் பே மற்றும் ஜி பே, பே டி.எம்., போன்றவற்றின் மூலம் விவசாயிகள் இடுபொருட்களுக்கான கட்டணத்தை செலுத்தும் வகையில் எளிமைபடுத்தும் வசதி துவங்கப்பட்டது.இதனை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கினார். துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) செல்வம், உதவி இயக்குனர் ஜானகிராமன் ஆகியோர் இடுபொருட்களை வழங்கினர்.கம்மாபுரம் உதவி இயக்குனர் வெங்கடேசன், வேளாண் அலுவலர் சிவகாமசுந்தரி, கிடங்கு மேலாளர் சுகன்யா உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.