மலக்கசடு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு கம்மாபுரம் கிராம மக்கள் சாலை மறியல்
விருத்தாசலம்:மலக்கசடு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்மாபுரத்தில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் அடுத்த முதனை - கோட்டேரி கிராம எல்லையில், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மலக்கசடு சுத்திகரிப்பு ஆலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பணிக்காக கடலுாரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதையறிந்த முதனை, கோட்டேரி கிராம மக்கள், வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றி, எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள பாழடைந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. அங்கு சுத்திகரிப்பு ஆலை வருவதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த கம்மாபுரம் ஜெ.ஜெ., நகர், மெயின் ரோடு குடியிருப்பு மக்கள் விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, மாணிக்கராஜா, ஜெயக்குமார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மலக்கசடு சுத்திகரிப்பு ஆலை அமைந்தால் நிலத்தடி நீர், காற்று மாசுபடுவதுடன் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்போர் கடுமையாக பாதிக்கப்படுவர். மேலும், கிராம சேவை மையம், அம்மா விளையாட்டுப் பூங்கா உள்ளது. தற்போது, புதிதாக சமுதாய நலக்கூடம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.இதனால் அத்தியாவசிய தேவைக்கு வரும் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றனர். பின், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் இல்லாமல், மக்களிடம் வதந்தி பரவியதாக தெரிவித்தனர். இதையடுத்து, காலை 11:00 மணிக்கு மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.