மணல் குவாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடலுார்: புதுச்சத்திரம் அருகே மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சவுடு மணல் குவாரி உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக்கூறி, ரமேஷ் என்பவர் நேற்று முன்தினம் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார், அவரை சமாதானம் செய்து கீழே இறங்கியதும், எச்சரித்து அனுப்பினர். நேற்று காலை அந்த மண் குவாரியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுக்கும் பணி தொடர்ந்தது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புவனகிரி தாசில்தார் தனபதி, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுஜாதா பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள், 10 ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில், மாலை 5 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தைக்கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.