ரயில்வே கேட் சாலை சீரமைப்பு
நெல்லிக்குப்பம் : தினமலர் செய்தி எதிரொலியால் காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் ரயில்வே கேட் சாலை பகுதி சீரமைக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் ஆலை சாலை, காராமணிக்குப்பம், வெள்ளகேட் பகுதிகளில் ரயில்வே கேட் கடக்க பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் தினமும் பலர் கீழே விழுந்து அடிபட்டு வந்தனர். நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி செல்லும் நுாற்றுக்கணக்கான டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் ரயில்வே கேட் கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு சென்றது. இந்த மூன்று ரயில்வே கேட் பகுதி சேதமடைந்து கிடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தது. ரயில்வே கேட் சாலை பகுதியை சீரமைக்க கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் ஆலை சாலை, காராமணிக்குப்பம் ரயில் கேட் பகுதி சாலை சரிசெய்யப்பட்டது. மீதமுள்ள வெள்ள கேட் பகுதி விரைவில் சரிசெய்யப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.