பிணவறை சீரமைப்பு பணி தொய்வு உறவினர்கள், போலீசார் புலம்பல்
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், ரயில் விபத்துகளில் சிக்கி காயமடைவோருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.இங்குள்ள பிணவறையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், 10 டன் குளிர்சாதன பெட்டி பொறுத்தப்படாமல் கேட்பாரற்று கிடந்தது. இதனால் சடலங்களை பாதுகாக்க முடியாமல், தனியாரிடம் கட்டணம் செலுத்தி பிரீசர் பாக்ஸ் பெறும் அவலம் இருந்தது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து, பிணவறை சீரமைக்கும் பணி துவங்கியதால், விபத்து, தற்கொலை, கொலை போன்ற சம்பவங்களில் சிக்கி வந்த சடலங்கள் திட்டக்குடி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதனால், விருத்தாசலத்தில் இருந்து 23 முதல் 35 கி.மீ., தொலைவிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று பிரேத பரிசோதனை போலீசாரின் அனுமதி கடிதம் தருவது முதல், அங்கிருந்து சடலங்களை எடுத்து வர ஆம்புலன்ஸ் செலவு என பல்வேறு இன்னல்களுக்கு உறவினர்கள் மற்றும் போலீசார் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிணவறை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.