கிள்ளை மீன்பிடி தளம் ரூ.9.50 கோடியில் புனரமைப்பு
கிள்ளை: கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளம் ரூ. 9 கோடியே 50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளத்தில், ரூ. 9 கோடியே 50 லட்சம் மதிப்பில், படகுகள் அணையும் தளம், மீன் ஏலக்கூடம், வலைப்பின்னும் கூடம், மீன் உலர் தளம், ஆழப்படுத்தும் பணி, பொருள் வைப்பு அறை, உட்புற சாலைவசதி உள்ளிட்ட பணிகள் மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.காணொளி மூலம் நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைதொடர்ந்து, கிள்ளை முடசல் ஓடையில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.விழாவில் ஒன்றிய செயலாளர் கலையரசன், செயல் அலுவலர் மருது பாண்டியன், தலைமை எழுத்தர் செல்வராஜ், கிராம தலைவர் நல்லரையன், படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.