உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி அருகே சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பண்ருட்டி அருகே சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே நடந்த சாலை மறியலால் உளுந்துார்பேட்டை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தில் கையகப்படுத்தப்பட்ட 6.84 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, ஆதிதிராவிடர்களுக்கு மனைப்பட்டா வழங்க கடந்த 2024 ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜன. 30ம் தேதி ஆர்.டி.ஒ., அபிநயா தலைமையில் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தகுதியுள்ள 67 நபர்களுக்கு மனைப்பட்டா வழங்கினர். ஆக்கிரமிப்பில் பாதித்த வர்களுக்கு தகுதி அடிப் படையில் இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவர்கள் அதே இடத்தில் சிறிய குடிசை கட்டி வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அவதி அடைந்த அவர்கள் நேற்று காலை 8:00 மணிக்கு, கடலுார் - உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்ய துவக்கினர்.பண்ருட்டி தாசில்தார் ஆனந்த், டி.எஸ்.பி., ராஜா, இன்ஸ்பெக்டர் அசோகன், துணை தாசில்தார் கிருஷ்ணா ஆகியோர், ஒரு வாரத்தில் இடத்தை சமன் செய்து மனைப்பட்டா வழங்குவதாக உறுதி அளித்தனர். அதனையேற்று காலை 11:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.சாலை மறியல் காரணமாக போக்குவரத்தை, அரசூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அந்த சாலை குறுகலாக இருந்ததால் காலை 8:40 மணிக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து நின்றது. காலை 9:30 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மீண்டும் மறியல்

மாலை 5:30 மணிக்கு பழைய காலனியை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் மனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலுார்- உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடுபட்ட வி.சி.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி தலைமையில் 44 பேரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து இரவு 9:00 மணிக்கு விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ