உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரத்த பரிசோதனை கூடத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

ரத்த பரிசோதனை கூடத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 1907ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு, மாவட்டம் முழுவதும் இருந்தும் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். 700க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோயின் தன்மை குறித்து கண்டறிய ரத்த பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தலைமை ஆய்வக நுட்புணர் உட்பட 10 பணியிடம் உள்ளது. அதில், ஒருவர் ரத்த வங்கியில் பணிபுரிகிறார். மேலும், 4 பேர் ஒரு மாதங்களுக்கு முன் பதவி உயர்வில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாறுதலாகி சென்றுவிட்டனர். இதனால், தற்போது ரத்த பரிசோதனை கூடத்தில் 5பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்குள்ள பணியாளர்கள் சுழற்சி முறையில் 3 ஷிப்டாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்த பரிசோதனைக்கூடத்திற்கு, நாளொன்றுக்கு உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் 350 பேர் ரத்த பரிசோதனைக்கு வருகின்றனர். காய்ச்சல் பரவும் சீசன் காலங்களில் 500 பேரில் இருந்து 600 பேர் வரை வருகின்றனர். காலை 7:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை வெளி நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் ரத்த மாதிரி பரிசோதனை செய்ய தினந்தோறும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், குறைந்த அளவிலான பணியாளர்கள் இருப்பதால், பரிசோதனை செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களும் வேலை பளுவால் அவதியுறுகின்றனர்.மருத்துவமனைக்கு வருவோரின் நோய் தன்மையை கண்டறிய ரத்த பரிசோதனை அவசியம் என்ற நிலையில், ரத்த பரிசோதனை கூடத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு மருத்துவமனை ரத்த பரிசோதனைக்கூடத்தில் போதிய அளவில் பணியாளர்களை நியமனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை