விருத்தாசலம்: விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் காட்சிப்பொருளான நிழற்குடைகளை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சிறப்பு திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை இடையே உள்ள 22 கி.மீ., துார நெடுஞ்சாலை, 'சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை' திட்டம் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 136 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது.இதில், மங்கலம்பேட்டை நகருக்கு வெளியே ரூபநாராயணநல்லுார் சமத்துவபுரத்தில் இருந்து, நகருக்கு மறுமுனை வரை 5 கி.மீ., தொலைவிற்கு புறவழிச்சாலையும் போடப்பட்டது.இத்திட்டத்தில் விருத்தாசலம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம், புதுக்குப்பம், பெரிவடவாடி, விஜயமாநகரம், கோ.பூவனுார், ரூபநாராயணநல்லுார், மங்கலம்பேட்டை புறவழிச்சாலை பஸ் நிறுத்தங்களிலும் இருபுறம் நிழற்குடைகள் கட்டப்பட்டன. கழிவறைகள், சின்டெக்ஸ் டேங்க், டைல்ஸ் இருக்கை வசதிகள் பொருத்தப்பட்டன. ஆனால், ஓரிரு மாதங்களில் கதவுகள் பெயர்த்து வீசப்பட்டன.இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, மதுபாட்டில்களை உடைத்து வீசிச் சென்றனர். மேலும், இருக்கைகளில் இருந்த டைல்ஸ் கற்களை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றனர்.இதனால் பயணிகள் அமர முடியாமல், பஸ் வரும் வரை காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதுபோல், தண்ணீர் வசதியின்றி கழிவறைகள் பாழாகி வருகின்றன.இதனால் நெடுந்துார பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.எனவே, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பாழாகி, காட்சிப் பொருளான நிழற்குடைகளை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.