போக்குவரத்து ஓய்வூதியர்கள் தபால் அனுப்பும் போராட்டம்
கடலுார் : அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டிற்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.கடலுார் தலைமை தபால் நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு, தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சிவகுருநாதன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறுகையில், ஓய்வூதியர்களுக்கு அரசு பென்ஷனில், அகவிலைப்படி உயர்வு இணைத்து வழங்கப்பட்டு வந்தது. இந்த அகவிலைப்படி உயர்வை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்குளுக்கு மட்டும் 2015ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள், வழங்க உத்தரவிட்டும் அரசு அமல்படுத்தப்படவில்லை.இதனால், 95,000 ஓய்வூதியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அகவிலைப்படி உயர்வுக்கு காத்திருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் இறந்துள்ளனர். எனவே, மீதமுள்ள ஓய்வூதியர்கள் உயிரோடு இருக்கும்போதே அகவிலைப்படி உயர்வு வழங்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி வழங்க வேண்டும். இதுகுறித்து மனுவை தபால் மூலம், சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.போராட்டத்தில் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் மதியழகன், துணைத் தலைவர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.