வீராணம் ஏரியில் இறந்து கிடந்த சிறுவன் யார்? போலீஸ் விசாரணை தீவிரம்
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரியில், கந்தகுமாரன் கிராமம் அருகே, நேற்று முன்தினம் மாலை 4 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் மிதந்தது. அழுகிய நிலையில் இருந்த அந்த உடலில், வெள்ளை சட்டையும், ரோஸ் கலர் கோட், நீல கலர் ஜீன்ஸ் பேண்ட் போட்ட நிலையில், உடல் அழுகி எலும்புகள் தெரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. இது குறித்த புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனின் உடலை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவத்துமனையில் பிரேத பரிசோசதனைக்காக வைத்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில், சிறுவன் காணாமல் போனது குறித்து எவ்வித புகார்கள் இல்லை என்பதை உறுதி படுத்திய போலீசார், வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வடவாற்றங்கரை கிராமங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தாய் சேய் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். யாரேனும் சிறுவனை கடத்தி வந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வீராணம் ஏரியில் 4 வயது சிறுவன் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.