இன்டர்நெட் கேபிளில் சிக்கி 100 நாள் பணியாளர் படுகாயம்
கிள்ளை:கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில், நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், 60 பேர், வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் அருகிலேயே விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு ஓட்டினர். அப்போது, மின் கம்பத்தில் கட்டியிருந்த பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் ஒயர், டிராக்டரின் கூரையில் சிக்கியது. டிராக்டரில் பட்டு, கேபிள் திடீரென இழுத்தது. அதனால், வாய்க்காலில் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கேபிளில் சிக்கி, அவர்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். விழுந்து துடித்த அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, டிரைவர் உத்திராபதி டிராக்டரை நிறுத்தி, கேபிளை அகற்றினார்.இந்த திடீர் விபத்தில், 31 - 55 வயதுடைய 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.