உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள்... தயார்; மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள்... தயார்; மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கடலுார் ; கடலுார் மாவட்டத்தில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 28 புயல் பாதுகாப்பு மையங்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தின்போது, துறை வாரியாக மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, 'வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி, டிசம்பர் வரையில் பெய்ய வாய்ப்பு உள்ளது. கனமழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்கள் 49 உள்ளடக்கிய, 57.5 கி.மீ நீளமுடைய கடற்கரை உள்ளது.மாவட்டத்தில் 239 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.கூட்ட முடிவில் அமைச்சர் கூறுகையில், 'மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களில் 8,400 நபர்கள் தங்கும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் 15,800 நபர்களும், 191 தற்காலிக தங்கும் இடங்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 875 பேர் தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் உரிய அலுவலர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பை மேம்படுத்தும் பொருட்டு முக்கிய அலுவலர்களுக்கு 125 எண்ணிக்கையில் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்டம் முழுவதும் 13 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் 274 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். 57 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது' என, அமைச்சர் தெரிவித்தார்.கூட்டத்தில், துணைமேயர் தாமரைச்செல்வன், எஸ்.பி., ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் சரண்யா, மாநகராட்சி கமிஷனர் அனு, சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மி ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு உபகரணங்களை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, பச்சையாங்குப்பம் புயல்பாதுகாப்பு மையம், சிதம்பரம் பாசிமுத்தான் ஓடை, மணலுார் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ