உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீடு புகுந்து திருடிய பிரபல கொள்ளையன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணந்தபுரம் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி கலைச்செல்வி,65; கணவரை இழந்த நிலையில், தனியாக வசிக்கிறார். கடந்த 17ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு, சாக்காங்குடியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய கலைச்செல்வி, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி, பித்தளை பொருட்கள், லேப்டாப், தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் பிரபல கொள்ளையர் காட்டுமன்னார்கோவில் அடுத்த பல்வாய்கண்டன் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் மணவாளன், 25; சப்பாணி குட்டை கிராமம் ஆரோக்கியதாஸ் மகன் மணிகண்டன்,25; பெரியபுங்கனேரி சம்மந்தம் மகன் அருண் குமார், 24; ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து பல்வாய்கண்டன் பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் போலீசார் கைது செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கையும், திருடு போன பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மூவர் மீது திருட்டு, அடிதடி, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !