மாணவிக்கு கத்திக்குத்து வாலிபர் வெறிச்செயல்
விருத்தாசலம்:காதலிக்க வற்புறுத்தி, பிளஸ் 2 மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி ஒருவர், நேற்று காலை, 8:00 மணிக்கு, பஸ் ஏற முயன்றார். அங்கு வந்த கோபாலபுரம் அருள்குமார், 21, என்பவர், மாணவியின் கையை பிடித்து இழுத்து, தன்னை காதலிக்க வேண்டும் என்றும், மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் கூறி, கையில் வைத்திருந்த பேனா கத்தியால், வலதுபுற நெற்றி, தலையில் கிழித்துவிட்டு, நண்பருடன் பைக்கில் தப்பினார்.அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் தையல் போட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.அருள்குமார் இரு ஆண்டுகளுக்கு முன், காதலிப்பதாக கூறி, மாணவிக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். மாணவி பெற்றோரிடம் கூறவே, அவர்கள், அருள்குமார் பெற்றோரிடம் கூறி கண்டித்தனர். இந்நிலையில், நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. விருத்தாசலம் போலீசார், அருள்குமாரை தேடி வருகின்றனர்.