சென்டர் மீடியனில் தொடரும் விபத்துகள்; தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
கடலுார்- விருத்தாசலம்- சேலம் (சி.வி.எஸ்., சாலை) மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 300 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து வேளாண் அறிவியல் நிலையம் வரை 1 கி.மீ., தொலைவிற்கு சர்வீஸ் சாலையுடன் 37 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது.அதுபோல், விருத்தாசலம் நகரில் பெரியார் நகர், தாலுகா அலுவலகம், ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், பாலக்கரை, தென்கோட்டைவீதி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணலுார், மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆங்காங்கே சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவற்றில் எச்சரிக்கை பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் பொருத்தப்படவில்லை.இதனால் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், பாலக்கரை, சிதம்பரம் ரோடு பிரிவு சாலை, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் முகப்பு பகுதிகளில் தினசரி அதிகாலை நேரங்களில் விபத்துகள் தொடர்கிறது. கார், பஸ் போன்ற வாகனங்கள் சென்டர் மீடியனில் மோதி, முன்புறம் முழுவதும் உருக்குலைந்து காட்சியளிக்கிறது. இதனால் டிரைவர்கள், பயணிகள் படுகாயமடைவது வாடிக்கையாகி விட்டது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் அவ்வப்போது செய்தி வெளியாகும்போது, கண்துடைப்பாக தார் பாரல்களை அடுக்கி எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால், ஓரிரு வாரங்களில் மீண்டும் விபத்துகள் நடக்கிறது.அதுபோல், ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் உள்ள சென்டர் மீடியனில் நேற்று முன்தினம் இரவு கார் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே, விருத்தாசலம் நகரில் உள்ள சென்டர் மீடியன்களில் எச்சரிக்கை பலகைகள், ஒளி பிரதிபலிப்பான்கள் மற்றும் சாலையில் ஒளிரும் பிளிங்கர்ஸ் அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.