விருத்தாசலம் சாலையில் விபத்து அதிகரிப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
புவனகிரி: பரங்கிப்பேட்டை-விருத்தாசலம் சாலையில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலை 35 கி.மீ.,தொலைவிற்கு இருவழி சாலையாக, 10 மீ., அகலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டது. அதிகளவு வாகனங்கள் செல்வதால் இந்த சாலை எப்போதும் பிசியாக காணப்படுகிறது. இந்த சாலையில், புவனகிரி பெருமாத்துாரில் இருந்து மஞ்சக்கொல்லை வரை அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. தொடர் விபத்துகளை கட்டுப்படுத்த சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, முதற்கட்டமாக தானியங்கி சிக்னல், கண்காணிப்பு கேமரா வேகத்தடை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இனியாவது விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.