கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதற்காக அன்புமணி விமர்சனம்: அமைச்சர் பன்னீர்செல்வம்
கடலுார்: பா.ம.க. தலைவர் அன்புமணி கூட்டணியில் இடம் பெறுவதற்காக தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். இதுகுறித்த அமைச்சர் கூறியதாவது: கடலுார், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் அறுவடை முடிந்துவிட்டது. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்னும் சில நாட்களில் அறுவடை முடிந்துவிடும். கனமழையால் நெல்மணிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசும், முதல்வரும் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விவசாயம், நெல், விவசாயிகள் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விடுகின்றனர். மேலும் அவர்கள், பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுகின்றனர். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் இடம் பெறுவதற்காக தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார். தற்போது அறிக்கை விடும் த.வெ.க. தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கிருந்தார். கொரோனா காலத்தில் தி.மு.க., வினர் வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினர். கஷ்டம் வரும்போது யார் உதவி செய்கிறார்களோ அவர்களை தான் மக்கள் அடையாளம் காண்பார்கள். விவசாயிகளும், விவசாயமும் தற்போது பேசும் பொருள் ஆகிவிட்டது. விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், என்று கூறினார்.