அந்தோணியார் ஆலய விழா ; ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு
விருத்தாசலம்; மேல்நாரியப்பனுாரில் தற்காலிகமாக ரயில்கள் நின்று செல்லும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வரும் 12 முதல் 14ம் தேதி வரை தற்காலிகமாக ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 12ம் தேதி (எண்.16855) புதுச்சேரி - மங்களூரு சென்ட்ரல் ரயில், இரவு 7:49க்கு மேல்நாரியப்பனுார் ரயில் நிலையம் வந்து, 7:50க்கு செல்லும். 13ம் தேதி (எண்.16573) யஷ்வந்த்பூர் - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 2:24 மணிக்கு வந்து, 2:25க்கு புறப்பட்டுச் செல்லும்.இதேப் போன்று, சேலம் - சென்னை எக்மோர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-22154), 12 முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்களும் இரவு 10:45க்கு வந்து, 10:46க்கு புறப்படும். இந்த ரயில், மறுமுனையில் (எண்-22153) 11 முதல் 13ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அதிகாலை 4:19க்கு வந்து, 4:20க்கு புறப்படும்.இத்தகவலை, தெற்கு ரயில்வே திருச்சி பி.ஆர்.ஓ., வினோத் தெரிவித்துள்ளார்.